இலங்கை அரசின் ஒரு அறிக்கை மீனவர் பிரச்சினையை தீர்க்கும்- முன்னாள் அரசியல் கைதி

                                                                                 


இலங்கை இந்திய மீனவர் விவகாரத்தில் இலங்கை அரசு ஒரே ஒரு அறிக்கை விடுவதன் ஊடாக பிரச்சினையை தீர்க்கலாம் என முன்னாள் அரசியல் கைதியும் சமூக செயற்பாட்டாளருமான வீரசிங்கம் சுலக்சன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 தமிழ் தேசிய அரசியல் அரங்கில் தற்போது ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை சர்வதேச உலகுக்கு உண்மையாக கொண்டு செல்லும் சக்தியாக ஊடகத்தினர் செயற்படுகின்றார்கள்.

அந்த வகையில்:-ஈழ யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாகின்றது ஆனால் சிறைச்சாலைகளில் இருக்கும் அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சர்வதேசமோ ஐநா மனித உரிமை ஆணையகமோ காத்திரமான நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை.

ஆனால் தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்கும் செயற்பாடுகளையே இலங்கை அரசும் அதனோடு சேர்ந்து இயங்கும் ஒரு சில தமிழ் அரசியல் தலைமைகளும் முன்னெடுத்து செயல்படுத்துகின்றன. 

ஈழத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவாக பல்லாயிரம் ஆண்டுகளாக இருக்கும் தாய் தமிழக உறவுகளுக்கும் ஈழத் தமிழ் உறவுகளுக்கும் இடையில் மோதலை தோற்றுவிப்பதில் இலங்கை அரசும் இந்திய புலனாய்வு பிரிவின் ரோ அமைப்பும் இணைந்து பல சதித் திட்டங்களை திரை மறைவில் செயல்படுத்துகின்றன. 

அதன் ஒரு அங்கமே இலங்கை இந்திய மீனவர் விவகாரம்... இறுதி யுத்த காலப்பகுதியில் ஈழத் தமிழ் உறவுகளுக்காக தங்களின் இன்னுயிர்களை அர்ப்பணித்த எமது தமிழக உறவுகளுக்கும் ஈழத் தமிழருக்கும் இடையில் மன மன கசப்பினை விதைக்கும் நோக்கில் சுலபமாக தீர்க்கப்பட வேண்டிய இந்திய இழுவைமடி மீனவர் பிரச்சனை ஆனது திட்டமிட்டு தமிழர் ஒன்றுபடுதலை தடுக்கும் நோக்கில் சிங்கள பேரினவாத அரசும் இந்திய புலனாய்வு பிரிவு ரோவும் இணைந்து செயல்படுகின்றன...

இது தமிழர்கள்  விழிப்படைய வேண்டிய கட்டாய தருணம் இது...
.
தற்போது தமிழகத்தில் தேர்தல் இடம்பெறவிருக்கும் சந்தர்ப்பத்தில்  இந்திய இலங்கை மீனவர் விவகாரத்தை பூதாகரமாக்கி அதனை வைத்து இம்முறை தமிழக தேர்தல் அரசியல் களத்தில் ஈழத் தமிழர் பிரச்சனையை ஓரங்கட்டி உள்ளார்கள்.

ஆனால் தமிழக தேர்தலில் கட்டாயம் தன்மானத் தமிழர்கள் நாம் தமிழர் கட்சியினை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை ஈழத் தமிழராகிய எமக்கு உண்டு....
இலங்கை இந்திய மீனவர் விவகாரத்தை  இலங்கை அரசு ஒரே ஒரு அறிக்கை விடுவதன் ஊடாக தீர்க்கலாம்...

"மீனவர் விவகாரத்தில் எல்லை தாண்டும் மீனவர்களை இந்தியா கட்டுப்படுத்தாத சந்தர்ப்பத்தில் இலங்கை சீனா நாட்டின் கடற் படையினரின் உதவியை கோரி கரையோர பாதுகாப்பு ரோந்து நடவடிக்கை மூலம் தனது இறையாண்மையையும் , பாதுகாப்பினையும் பேணவேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்படும் என்ற ஒற்றை அறிக்கை மூலம் இலங்கை இந்திய மீனவர் விவகாரம் தீர்க்கப்படலாம். என முன்னாள் அரசியல் கைதியும் சமூக செயற்பாட்டாளருமான வீரசிங்கம் சுலக்சன் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

புதியது பழையவை